பழநி, ஆக. 4: ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி பழநி பெரியாவுடையார் கோயிலில் அஸ்திரதேவர் மற்றும் கன்னிமார் பூஜை நடந்தது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி பல்லக்கில் பெரியாவுடையார் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சிவன், விநாயகர், பிரம்மா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சண்முகநதி ஆற்றங்கரையில் கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பராசக்தி வேலுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.ஆடிப்பெருக்கையொட்டி சிறுவர்கள் தேங்காயில் துளையிட்டு அவுல், கரும்பு சர்க்கரை, எள் உள்ளிட்ட பொருட்களையிட்டு தேங்காயை நெருப்பில் சுடும் நிகழ்ச்சி நடந்தது.
சண்முகநதி ஆற்றில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், புதுமண பெண்கள் மங்கல நாண் மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. வீடுகளில் மறைந்த முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பழநி மலைக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வின்ச் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் சுற்றுவரிசை முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பஸ் நிலையம் துவங்கி அடிவார பகுதி வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சண்முகநதி மற்றும் பெரியாவுடையார் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதேபோல் திண்டுக்கல் கோட்டைக்குளத்திலும் ஆடிப்பெருக்கையொட்டி புதுமண தம்பதிகள் வழிபாடு நடத்தி மங்கல நாண் மாற்றி கொண்டனர்.