கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18ம் தேதி) துவங்கி, வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழங்குடியின மக்கள் மேம்பாடு அடைவதற்காக பிரதம மந்திரியின் சிறப்பு திட்டங்களான(PMJANMAN-DAJGUA) கீழ், பழங்குடிப்பகுதிகளில் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அதன்படி, பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் சார்பில், பழங்குடியின மக்களுக்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சானிறதழ், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், பெண்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைக் மேம்பாட்டு சேவைகள் ஏற்படுத்தி தருவது தொடர்பான முகாம்கள் நடைபெற உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி தாலுகா அலுவலகங்களில் இன்று(18ம் தேதி) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் வரும் 20ம் தேதியும், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் வரும் 24ம் தேதியும், ஓசூர் தாலுகா அலுவலகத்தில் 27ம் தேதியும், தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகா அலுவலகங்களில் 30ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே, பழங்குடியின மக்கள், இம்முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.