பந்தலூர், ஆக.28: பந்தலூர் அருகே எருமாடு வருவாய் கிராமத்தில் வீடு வீடாக சென்று பழங்குடியினர் மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட போத்துக்கொல்லி, மங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உதவியாளர் கனிமொழி ஆகியோர் பழங்குடியினர் மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 30ம் தேதி வரை இப்பணிகள் நடைபெறும். இதனை பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தனர்.