நன்றி குங்குமம் தோழி இன்றைய அவசர உலகில் எந்த உணவையும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுகிறோம். அதற்கான நேரம் காலமே நாம் பார்ப்பது இல்லை. அவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன், செரிமான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக பழங்களை கூட நாம் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் வினிதா கிருஷ்ணன்.* ‘‘நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளில் பழங்களும் ஒன்று. பழங்கள் நம் உடலுக்கு நல்லது. ஒவ்வொரு பழங்களிலும் நம் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் உள்ளன. அப்படிப்பட்ட சத்துள்ள பழங்களை நாம் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம்.* ‘‘பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் பல்வேறு நோய்களால் நமக்கு பாதிப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. சரியான முறையில் நாம் பழங்களை எடுத்துக் கொள்ளும்போது அது நமது செரிமான மண்டலத்தை மட்டுமல்லாமல் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் அளவையும் மேம்படுத்தும். பழங்களை சரியான முறையில் எடுத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். தவறான முறையில் எடுத்துக் கொள்ளும்போது அவை நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பழங்களை சரியான முறையில் எடுத்துக் கொள்வதற்கான சில விதிமுறைகள் உள்ளன. அதை கண்டிப்பாக ஒவ்வொரு வரும் கடைப்பிடிக்க வேண்டும்.* எப்போதும் புதிய பழங்களையே வாங்கி சாப்பிடுங்கள்.* பழங்களை வெட்டி பாத்திரங்களில் வைத்து பல மணி நேரம் கழித்து சாப்பிடாதீர்கள்.* பழங்களை வெட்டியவுடன் 20 நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும். நேரம் தாமதித்தால் அதில் உள்ள சத்துக்கள் நம் உடலில் சேராது.* எப்போதும் உள்நாட்டில் விளையும் நாட்டு பழங்களையே சாப்பிடுங்கள். அதுவே நமது உடலுக்கு உகந்ததாகும்.* பருவநிலைக்கு ஏற்ப கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.* உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடாதீர்கள். எப்போதும் உணவு உட்கொள்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது உணவு சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்திற்கு பின்னரோ பழங்களை சாப்பிடுங்கள். அவ்வாறு பழங்களை சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் அனைத்து சத்துக்கள், சர்க்கரை ஆகியவற்றை நமது செரிமான மண்டலத்தை எளிமையாகவும் வேகமாகவும் செரிக்கச் செய்யும். இல்லை என்றால், செரிமான பிரச்சினை, நெஞ்செரிச்சல், மூச்சுத் திணறல் மற்றும் இதர செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.* இரவில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறு ஏற்படும்.* மாலை 6 மணிக்கு முன் பழங்களை சாப்பிட வேண்டும். இரவில் பழங்களை எடுக்க விரும்புபவர்கள் இரவு உணவுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.* காலையில் எழுந்தவுடன் முதலில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பல மணி நேரம் நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் முதலில் பழத்தை சாப்பிடும்போது அது நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். அடுத்த 1 மணி நேரத்தில் பசியை தூண்டும்.* பழங்களை சாறாக (ஜூஸ்) குடிக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூசர்கள் மூலம் நாம் பழங்களை சாறாக மாற்றும்போது அதில் உள்ள அதிக வெப்பம் காரணமாக பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் சரிவர கிடைக்காமல் செரிமானம் மற்றும் மென்மையான குடல் இயக்கத்திற்கு பிரச்சினை ஏற்படும். மேலும் அந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தன்மையும் குறையும். எப்போதாவது பழச்சாறு குடிக்கலாம். ஆனால் தொடர்ந்து குடிக்க வேண்டாம்.* பழச்சாறுகளை நீங்கள் குடிக்க விரும்பினால் அப்போது புதிதாக செய்யப்பட்ட பழச்சாறுகளை மட்டுமே குடியுங்கள் மற்றவற்றை தவிர்த்திடுங்கள்.* பாலுடன் பழத்தை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு உகந்ததல்ல. உதாரணமாக புளிப்பு நிறைந்த ஆரஞ்சு போன்ற பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் போன்ற பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.*நாளொன்றுக்கு 5 முறை பழங்களை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முதல் முறையாக பழங்களை சாப்பிடுபவர்கள் மீடியம் சைஸ் அளவு கப் அளவில் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.* தனிப்பட்ட ஒருவரின் பசியை பொறுத்து அவர்களுக்கு தேவையான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் அவர்கள் நீரிழிவு நோயாளியாகவோ அல்லது உடல் எடையை குறைக்க விரும்பினாலோ அவர்கள் அதிக அளவில் பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் பழங்களில் உள்ள சர்க்கரை தன்மை இந்த இரண்டு பிரச்னைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.* விதவிதமான பழங்களை சாப்பிடுங்கள். ஒவ்வொரு பழங்களிலும் பல விதமான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் உள்ளன. அவை நம் உடலுக்கு ஒவ்வொரு நன்மையை கொடுக்கும். பழங்களை சாப்பிடுங்கள் ஆரோக்கியமா வாழுங்கள்’’ என்றார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் வினிதா கிருஷ்ணன்.– ஜெனிபா
பழங்களை எப்படி, எப்போது சாப்பிடலாம்?
71
previous post