ஜெயங்கொண்டம்,மே 20:ஜெயங்கொண்டத்தில் வாரச்சந்தைக்கு முன்பாக இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை வழிமறித்து பழக்கடைகள் அமைக்கப்பட்டதை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டத்தில் புதிய நகராட்சி கட்டிடம் அருகே பல வருடங்களாக இயங்கி வந்த வாரச்சந்தையை சீர்திருத்தம் செய்வதற்காக வார சந்தையை தற்காலிகமாக வேறு இடத்தில் நகராட்சியினர் அமைத்திருந்தனர்.தற்போது அருகே மீன்மார்க்கட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வார சந்தைக்கு முன்பாக ஆட்டோ சங்கம் இயங்கி வந்தது இந்த சங்கத்திற்கு முன்பாக ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்காக இயக்கப்பட்டு வந்தது.
திங்கட்கிழமை வழக்கமாக இயங்கி வரும் வாரச்சந்தை நேற்று தொடங்கியது. தொடங்கப்பட்டதற்கு பின்னர் ஆட்டோ சங்கத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை வழிமறித்து நெடுஞ்சாலை ஓரத்தில் பழக்கடை வியாபாரிகள் பழக்கடைகளை அமைத்து வியாபாரம் செய்திருந்தனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர்கள் பழக்கடை வியாபாரிகளிடம் பல முறை கடைகளை அப்புறப்படுத்த கேட்டனர், அவர்கள் அப்புறப்படுத்தவில்லை. கடந்த மூன்று வாரமாக இதே நிலை நீடித்து வந்ததாலும் சவாரி எங்கும் செல்ல முடியாததாலும் ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்டோ டிரைவர் சங்கத் தலைவர் ராமநாதன் தலைமையில்சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாரச்சந்தை அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்தும் வாரச்சந்தையிலிருந்தும் நோயாளிகளும் பயணிகளும் எங்கும் பயணிக்க இயலவில்லை.
இத்தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களிடம் பேசி மறியலை கைவிட கூறினார். பின்னர் பழக்கடை வியாபாரிகளிடம் பேசி பழக்கடைகளை வாரச்சந்தை உள்ளே சென்று வியாபாரம் செய்யவும் அறிவுறுத்தி வந்தார். சாலை மறியலால் ஜெயங்கொண்டம் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.