உசிலம்பட்டி, அக். 4: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள எம்.அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் கிஷோர் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். மூத்த குழந்தை எழுமலை அருகே உள்ள மள்ளப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜூ படித்து வரும் நிலையில் நேற்று பள்ளியை முடித்துவிட்டு பள்ளி வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
எம்.அய்யம்பட்டியில் அவரை அழைத்து செல்வதற்காக பெண் குழந்தையின் தாய் சாந்தி மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் கிஷோர் பள்ளி வாகனத்தின் அருகில் வந்து நின்றிருந்த போது பெண் குழந்தையை இறக்கிவிட்டு பள்ளி வாகனத்தை இயக்கிய போது வாகனத்தின் அடியில் இருந்த ஒன்றரை வயது சிறுவன் தன் தாய் கண் முன்பே வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.