வேலூர்,: வேலூரில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பஸ் நிறுத்தத்தில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் அண்ணா சாலையில் இரண்டு அரசு நிதியுதவி பள்ளிகள் அருகருகே அமைந்துள்ளன. நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி விட்டதும் பள்ளி மாணவர்கள் பழைய மாநகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் வழக்கம்போல் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இரண்டு மாணவர்களிடையே வாய்த்தகராறு எழுந்துள்ளது. தொடர்ந்து அது கைகலப்பாக மாறியது.
இதை பார்த்து அவ்வழியாக சென்ற இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அங்கு விரைந்து சென்று தங்கள் பள்ளி மாணவருக்கு ஆதரவாக மோதலில் இறங்கினர். இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து அருகில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து கலைந்து ஓடினர். இதையடுத்து அங்கு அமைதி ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.