திருச்செங்கோடு, அக்.27: தமிழகத்தை சேர்ந்த 29 மாவட்டங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 50பேருக்கு, பரிசுகள் மற்றும் இலவச கல்வி வழங்கும் விழா, நாளை திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை வகிக்கிறார். ரஷ்ய தூதரக அதிகாரி ஒலெக் அவ்கேவ், கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ரஷ்ய கலாச்சார தூதரக அதிகாரி அலெக்சாண்டர் டோட்னோவ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் அகிலா முத்துராமலிங்கம் வரவேற்று பேசுகிறார்.
விண்வெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மூத்த விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் ஜனவரி 26ம் தேதி முதல் 15 அமர்வுகளாக, ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி இணைய வழியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 50 மாணவ, மாணவிகள், 10 ஆசிரியர்கள் ரஷ்யாவின் கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பத்தை அறியும் விதமாக ரஷ்ய நாட்டிற்கு சென்று பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். இந்த மாணவர்களை கவுரவிக்கும் விதமாக, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், இலவச கல்விக்கான அறிவிப்புகளும் அளிக்கப்பட உள்ளது.