வேப்பனஹள்ளி, ஆக.13: வேப்பனஹள்ளியில், பள்ளி சமையலறை ஜன்னலை உடைத்து, மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உருது பள்ளி மாணவர்களுக்கான பள்ளியும், அதனையொட்டி சமையலறையும் உள்ளது. இப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை பணி முடிந்ததும், சமையலர் பிரேமா, சமையலறையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை மீண்டும் பணிக்கு வந்த போது, சமையலறை ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்து தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஜன்னலை உடைத்து சமையலறைக்குள் புகுந்ததும், பொருட்கள் வைத்திருந்த உள் அறையின் பூட்டை உடைக்க முடியாததால், அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. உள் அறையின் பூட்டை உடைக்க முடியாததால், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தப்பின. இதுகுறித்த புகாரின் பேரில், வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.