மதுரை, ஜூன் 3: அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர் விடுதிகள் 20ம், மாணவியர் விடுதிகள் 8ம் உள்ளன. கல்லூரி மாணவர் விடுதிகள் 4ம், மாணவியர் விடுதிகள் 3ம் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிப்போரும் சேரலாம்.
விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இன்றி மாணவ, மாணவியருக்கு 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும். 10ம் வகுப்பு வரை பயில்வோருக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு படிப்போரின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜமக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கிப் படிப்போருக்கு பாய்களும் வழங்கப்படும். விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைவருக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேர, பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. இதற்கான விண்ணப்பங்களை விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 18ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 15க்குள்ளும் வழங்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென 5 இடங்கள் உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.