தர்மபுரி, ஆக.14: அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள், வரும் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க, தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே, வரும் 20ம்தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை 9.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- வாய்மையே வெல்லும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், பெரியாரும் பெண் விடுதலையும், வைக்கம் வீரர், சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசாக ₹5ஆயிரம், 2ம் பரிசாக ₹3ஆயிரம், 3ம் பரிசாக ₹2ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக தொகை ₹2ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று, பேச்சு போட்டியில் பங்கேற்கலாம். எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.