சிவகங்கை, டிச.1: கற்பித்தல் பணியினை பாதிக்கும் எமிஸ் பதிவுகளை மேற்கொள்வதில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகை பதிவு, விலையில்லா பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பதிவுகள் அனைத்தும் ஆசிரியர்களே மேற்கொள்வதால் அவர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான கிராம பள்ளிகளில் இணைய வசதிகள் இல்லாததால் இணைய செயலி வழியாக பதிவுகள் மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளது. இதனால் இப்பதிவுகளை மேற்கொள்வதில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
கடந்த அக்.12 அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் நவம்பர் முதல் எமிஸ் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அதற்கான ஆணைகள் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது. மறுநாள் நடந்த பேச்சுவார்த்தை விளக்க கூட்டத்தில் தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள் நேரடியாக கலந்து கொண்டு உறுதியளித்தனர்.
ஆனால் அதன் பின் இதுநாள் வரை அதிகாரபூர்வமான ஆணை எதுவும் வெளிவரவில்லை. இதனால் எமிஸ் பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆசிரியர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். கற்பித்தல் பணியினை பாதிக்கும் எமிஸ் பதிவுகளை இனி மேற்கொள்ளப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக எமிஸ் பதிவுகளை மேற்கொள்வதில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.