பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கிணற்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முருகைய்யா என்பவரின் 2வது மனைவி சிட்டியம்மாள்(55). இவர்களுக்கு பிறந்த மூன்று பெண்களுக்கும் திருமணமாகி கணவர்களுடன் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகைய்யா இறந்து விட்ட நிலையில், சிட்டியம்மாள் மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கிராமத்திற்கு அருகில் மூர்த்தி என்பவரின் விவசாய கிணற்றில் சிட்டியம்மாள் சடலம் மிதப்பதாக தோட்டத்தின் உரிமையாளர் மூர்த்தி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த பள்ளிப்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிட்டியம்மாள் இறப்பு குறித்து முருகைய்யா முதல் மனைவி மல்லீஸ்வரி மகன் சீனிவாசுலு மனைவி கிருஷ்ணவேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், இறந்த எனது மாமியார் சிட்டியம்மாள் என்பவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும், கிராமத்திற்கு அருகில் இருவரும் ரகசியமாக சந்திக்க சிட்டியம்மாள் சாப்பாடு, பன்றிகறி எடுத்து சென்றுக் கொண்டிருந்தபோது மூர்த்தி என்பவர் சாகுபடி செய்துள்ள வேற்கடலை பயிரை, காட்டு பன்றிகள் நாசப்படுத்துவதை தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி சிட்டியம்மாள் இறந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி சடலத்தை கிணற்றில் வீசி இறப்பை திசை திருப்பி தற்கொலையாக சித்தரித்து இருப்பதாக புகார் செய்தார். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.