திருத்தணி, ஜூன் 26: திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புச்சிரெட்டிப்பள்ளி, தெக்களூர், கிருஷ்ணசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு தொடர்பு இல்லாத 4 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ குணசேகரன் மற்றும் போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். அதில், தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் ஒருவரும், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் என்பதும், புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி சென்று தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.