அரியலூர், மே 19:அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசு உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து எடுத்துரைக்கவும், பேருந்துகளின் செயல்பாட்டினை கண்காணிக்கவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில் வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்புக கருவி, படிக்கட்டுக்கள், கதவுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 62 பள்ளிகளைச் சேர்ந்த 276- வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது. இம்மாத இறுதிவரை வாகனங்கள் ஆய்வு மற்றும் மறு ஆய்வு செய்யப்படும், குறைபாடுடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு, சரிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டும். குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் சரி செய்த பின்னர் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும். தீயணைப்பு கருவிகள் பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டது.மேலும், ஓட்டுநர்கள் வாகனங்களின் செயல்திறன் குறித்த முழு விவரத்தினையும் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும், பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் எனவும், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி ஆரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவ மற்றும் ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.