வேளச்சேரி, மார்ச் 27: பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலியானார். மற்றொரு தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை பள்ளிக்கரணை வேளச்சேரி -மேடவாக்கம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை தாம்பரத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. பல நாட்களாக இரவு, பகலாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பு (59), திருப்பதி (30) உள்ளிட்ட தொழிலாளர்கள் பள்ளிக்கரணை பகுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பள்ளிக்கரணை பாரதிதாசன் 2வது தெருவில் உள்ள கழிவுநீர் குழாயை வேளச்சேரி-மேடவாக்கம் பிரதான சாலையில் செல்லும் கழிவுநீர் குழாயுடன் இணைக்கும் பணியில் அன்பு, திருப்பதி ஈடுபட்டனர். 10 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி வேலை செய்தபோது, எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து விழுந்ததில் அன்பு சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மணலில் சிக்கி உயிரிழந்த அன்பு உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமான நிறுவன உரிமையாளர், ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.