ராமநாதபுரம், ஆக.28: தொடக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவு படுத்தப்பட்டதிற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட த்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறும்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல நல்ல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தால், பள்ளிக்கல்வி மேலும் பரவலாக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளியில் கற்றல்-கற்பித்தல் இனிமையாக அமையும்.
இனிமேல் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பசியின்றி படிப்பார்கள். மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறையும். நாட்டிலேயே முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டத்தால் ஏழை குழந்தைகளின் கல்வியிலும், குழந்தைகளின் வாழ்க்கையிலும் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும். 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் காலை உணவுத் திட்டத்தை ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது என்றார்.