கோவை, செப். 8: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற்றும் காட்சி கலை என 4 தலைப்புகளில் கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. அதில் முதலிடம் பிடித்த மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இன்று கோவை, பொள்ளாச்சியில் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் அக்டோபர் 4ம் தேதி ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. வாய்ப்பாட்டு இசை -செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவி இசை -தாள வாத்தியம், மெல்லிசை, நடனம்-செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை, காட்சிக்கலை-இருபரிமாணம், மூன்று பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள், விளையாட்டுகள், நாடகம் (தனி நபர் நடிப்பு) ஆகிய 10 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.