ஈரோடு, செப். 6: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆசிரியர் தினமான நேற்று ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவிகள் தங்களின் வகுப்பாசிரியர்களுக்கு பூ மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கியும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஆசிரியர் தினத்தின் சிறப்பு, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்த பணிகள், வ.உ.சிதம்பரனாரின் சிறப்புகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.