திருப்பூர்,நவ.13: திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகங்கள் வீணாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து, கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி, திருட்டு மற்றும் போக்குவரத்து விதிமீறல் உட்பட பல குற்ற வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலைய இடதுபுறம் உள்ள காலி இடத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இனி மேல் இந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என்பது அவற்றை பார்த்தாலே புரியும். வழக்கு விசாரணையின் போது இந்த வாகனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். நீதிமன்றங்களில் இடப்பற்றாக்குறையால் இந்த வாகனங்களை போலீஸ் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை முடிய குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டுகள் ஆவதால் வாகனங்கள் நாளடைவில் துருப்பிடித்து வாகனத்தை இயக்க முடியாமல் மாறிவிடுகிறது. வழக்கின் முடிவில் உருக்குலைந்து காணப்படும் இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் யாரும் எடுத்துச் செல்ல விரும்புவதில்லை. இதனால் மொத்தமாக ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் சுமார் 50 வாகனங்கள் ஏலம் விடாததால் நாளடைவில் வாகனங்களில் உள்ள ஒவ்வொரு உதிரி பாகங்களாக காணாமல் போவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.