ஆண்டிபட்டி, ஆக. 2: குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை வலியுறுத்தி கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலூட்டலைச் சாத்தியமாக்குவோம், உழைக்கும் பெண்களுக்கு மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்பதே தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் ஆகும். இந்த பொறுப்பினை பெற்றோர்கள் மட்டுமின்றி அனைவரும் உணர்ந்து தெளிதல் வேண்டும்.
இதனை எடுத்துரைக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் தாய்ப்பால் வார விழா நடத்தப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தாய்பாலின் மகத்துவம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இதில் கவனம் செலுத்த தவறி விடுகின்றனர். வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை எடுத்து வைத்து மற்றவர்கள் மூலம் வழங்கலாம்.
3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை இவ்வாறு எடுத்து வைக்கப்படும் தாய்ப்பாலை வழங்கலாம். இது பலருக்கு தெரிவதில்லை. எனவே இதனை இங்கு வந்து இருக்கும் தாய்மார்கள் வேலைக்கு செல்லும் மற்ற தாய்மார்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் தற்போது ரத்த தானத்தை போலவே தாய்ப்பால் கொடையும் அவசியம் ஆகிறது.சில நோய்களினால் தாய் பாதிக்கப்பட்டு இருப்பின் குழந்தைக்கு அந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவர்களால் தாய்ப்பால் வழங்க இயலாது. அவர்களைப் போன்றவர்களுக்கு இந்த தாய்ப்பால் கொடை மிகவும் உதவுகிறது’’ என்றனர்.