மதுராந்தகம், நவ.2: மதுராந்தகத்தில் மாதச் சீட்டு, சிறுசேமிப்பு, நகை சீட்டு என பல்வேறு சீட்டுகள் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏ.கே ஜுவல்லரி உரிமையாளரை கண்டித்து வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இயங்கி வரும் ஏகே ஜுவல்லரி அதன் உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன், மதுராந்தகத்தில் உள்ள வணிகர்கள், சிறுகடை உரிமையாளர்கள், பொதுமக்கள் என ஆயிரம் நபர்களிடம், மாதாந்திர சிறு சேமிப்பு, நகை சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நகைக்கடை உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமா நகை கடை, திருமண மண்டபங்கள் என பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளதை நம்பி அப்பகுதி மக்கள் சீட்டு போட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி கடை உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன் தனது திருமண மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றைய தினத்தில் சுமார் 100 நபர்களுக்கு பல லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறி இருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில், ஆனந்த கிருஷ்ணன் இறந்த அன்று வாடிக்கையாளர்கள் அவரது வீட்டுக்குச் சென்று, அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அண்ணன் பாபுவிடம் கட்டிய பணத்தை திருப்பி கேட்டதற்கு, நாங்கள் யாருடைய பணத்தையும் ஏமாற்ற மாட்டோம். எந்த பாவமும் எங்களுக்கு வேண்டாம். உங்கள் பணத்தை திருமண மண்டபத்தை விற்று மூன்று மாதத்தில் கொடுத்து விடுகிறேன் என கூறி வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பணம் தரவில்லை.
சீட்டு பணத்தை திருப்பி தரக்கோரி வாடிக்கையாளர்கள், கிருஷ்ண மூர்த்தி மற்றும் பாபுவிடம் கேட்டதற்கு, நீங்கள் எங்களை வந்து மிரட்டுவதாகவும், கொலை செய்ய முயற்சி செய்வதாக உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சீட்டு போட்டு ஏமாந்த வாடிக்கையாளர்கள் ஏகே ஜுவல்லரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மதுராந்தகத்தில் உள்ள ஏகே ஜுவல்லரி உரிமையாளர் திருமண மண்டபம் எதிரே 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.