திருப்பூர், ஜூலை 28: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 8-ம் ஆண்டு நினைவு தினம் கல்லூரி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. என்.எஸ்.எஸ். அலகு-2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில் 70க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, நான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சிய விதையை விதைப்பேன், தேசத்தின் முக்கியத்துவத்தை மதித்து நடப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிட்மா சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி தலைமை வகித்து அப்துல் கலாமின் எளிமையான பண்பு மற்றும் மாணவர்கள், இளைய தலைமுறையினர் மீது கொண்ட அன்பையும் பற்றி பேசினார். நிட்மா செயலாளர் சீமென்ஸ் ராஜாமணி, பொருளாளர் தசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.