தாம்பரம், அக். 5: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று மாலை மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்காக வந்தபோது திடீரென ஒரு முதியவர் தண்டவாளத்தில் விழுந்தார். இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்த முயற்சித்தார். ஆனால், அதற்குள் ரயில் முதியவர் விழுந்து கிடந்த இடத்தை தாண்டி பாதி தூரம் சென்று நின்றது. இதை பார்த்த பொதுமக்கள் ஐயோ, அம்மா என பதற்றத்துடன் கூச்சலிட்டனர். உடனடியாக ரயிலில் இருந்த பயணிகள் சிலர் கீழே இறங்கி ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருந்த முதியவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் ரயிலின் அடியில் சிக்கிக்கொண்ட முதியவர் பொதுமக்கள் உதவியுடன் தவழ்ந்து தவழ்ந்து பத்திரமாக வெளியே வந்தார். பின்னர் அங்கிருந்த ரயில்வே போலீசார் முதியவரிடம் விசாரித்த போது, திருமழிசை பகுதியை சேர்ந்த ரவி (66) என்பதும், உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு பல்லாவரம் பகுதிக்கு வந்ததாகவும், பின்னர் ரயிலில் ஏற முயன்றபோது போதையில் தண்டவாளத்தில் விழுந்ததாகவும் கூறியதாக தெரிவித்தனர். முதியவர் ஒருவர் மின்சார ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.