குன்றத்தூர், அக்.6: பல்லாவரம் பகுதியில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த ₹600 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறும் இடத்தின் அருகே அரசுக்கு சொந்தமான (சர்வே எண்:166/2) சுமார் ஒரு ஏக்கர் 19,602 சதுர அடி நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ₹600 கோடி. அந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த எம்.எம்.குப்தா என்பவர் ஆக்கிரமித்து, அதன் ஒரு பகுதியில் வீடு மற்றும் தொழிற்சாலை கட்டி, குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், அந்த இடத்தை சினிமா ஷூட்டிங் நடத்த வாடகைக்கு விட்டு, பெரும் லாபம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடத்தை காலி செய்ய கோரியும் வருவாய்த்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர் காலி செய்யவில்லை.
இதையடுத்து இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மேற்படி அரசு நிலத்தை வருவாய்த்துறை மீட்க வேண்டும், என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை உடனடியாக மீட்டு நடவடிக்கை எடுக்குமாறு பல்லாவரம் தாசில்தாருக்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று, பல்லாவரம் போலீசார் பாதுகாப்போடு, மேற்படி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள் மற்றும் தொழிற்சாலை அடங்கிய மொத்த இடத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.
முன்னதாக, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்துச் செல்லுமாறு அங்கிருந்தவர்களுக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் பொருட்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதும், அதிகாரிகள் உடனடியாக வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அந்த இடத்திற்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில், அரசுக்கு சொந்தமான இடம், அத்து மீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பதாகையும் வருவாய்த்துறை சார்பில் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.