பல்லடம், அக்.18: பல்லடம் அருகே கோவில்பாளையம் ராமசாமி கோயில் முன்பு பக்தர் நிறுத்தி சென்ற வேனை திருடியரை போலீசார் கைது செய்தனர். பல்லடம் அருகே செஞ்சேரிமலையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 14ம் தேதி புரட்டாசி சனிக்கிழமையன்று சாமி தரிசனம் செய்வதற்காக பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் கோவில்பாளையத்தில் ராமசாமி கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் முன்பு வேனை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றவர் திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது வேனை காணவில்லை. இது குறித்து சதீஷ்குமார் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வேனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த வேனை பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த கார் புரோக்கர் முத்துகுமார் (39) திருடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து வேனை மீட்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.