செங்கல்பட்டு: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகாதார அலுவலக வளாகத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தாணு தலைமை தாங்கினார். தமிழ்செல்வி, குமரன், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் மூலம் இன சுழற்சி அடிப்படையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறோம். எங்களை உடனடியாக தமிழக அரசு பணி நிரந்தம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்று முதற்கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் சென்னையில் அடுத்த மாதம் 21ம் தேதி தங்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் விஜயக்குமார் நன்றி கூறினார்.