மேட்டுப்பாளையம்,மே15: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் மரங்களில் பலாக்காய்கள் கனிந்து தொங்குகின்றன. இந்த பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருகின்றன.
மேலும்,காட்டு யானைகளுக்கு நுகர்வுதிறன் அதிகம் என்பதால் பலாப்பழங்களின் வாசனையால் ஈர்க்கப்பட்டு பலா மரங்கள் அதிகமுள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால் யானைகள் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன. சர்வ சாதாரணமாக பகல் நேரங்களில் கூட யானைகள் நடமாடுவதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்: தற்போது பலாப்பழ சீசன் என்பதால் யானைகளின் நடமாட்டம் ஊட்டி சாலையில் அதிகமாகவே இருந்து வருகிறது.இதனால் சாலையோர தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பழங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் சாலையோரம் காட்டு யானைகளுக்கு பிடித்தமான இது போன்ற பலா,தர்பூசணி உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர பழக்கடைகளை அப்புறப்படுத்தும் படி நெடுஞ்சாலைத்துறைக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் வனத்துறை சார்பில் கல்லாறு முதல் பர்லியாறு வரை இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 24 மணி நேரமும் தங்களது ரோந்து பணியினை மேற்கொள்வர் என்றார்.
கவுன்சிலர்கள் வாக்குவாதம்
மாநகராட்சி கிழக்கு மண்டலம் 26வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி ரோட்டில் இயங்கும் குப்பை மாற்று மையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு, மாமன்ற ஆளும்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் மீனா லோகு (சென்ட்ரல்), இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), கதிர்வேல் (வடக்கு), கல்விக்குழு தலைவர் மாலதி ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.
இரங்கல் தீர்மானம்
மேயர் ரங்கநாயகி, முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கும், காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவந்தார். மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தினர்.