தொட்டியம், ஆக.3: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மணமேடு மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குழந்தை. இவர் கேரள மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நாகம்மாள் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கடலை பறிப்பதற்காக கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந் நிலையில் வீட்டிலிருந்த இவரது மகன் தனபால் (18) பக்கத்து தெருவில் வசித்து வரும் அம்சவல்லி என்பவரது வீட்டிற்கு சென்று அங்கிருந்த பூவரச மரத்தில் ஏறி கிளையை வெட்டிவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மரத்திலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது.
இதில் தலை குப்புற தரையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் தனபாலை அருகில் இருந்தவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தனபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நாகம்மாள் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தனபால் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.