சென்னை, பிப்.24: பறவைகளை ஈர்க்கும் விதமாக தங்கசாலை மாநகராட்சி பூங்காவில் கனி தரும் மரங்களை நட பசுமை சூழல் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தங்கசாலை பூங்கா (மிண்ட் பூங்கா) கடந்தாண்டு ஜன.5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. சுமார் 9 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட இந்த பூங்கா, காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுகின்றன.
பசுமை சூழல் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, உடற்பயிற்சி கூடம், யோகா கூடம், குழந்தைகள் விளையாட தனி அறை, நவீன கழிப்பறை என பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. வட சென்னை மக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த பூங்காவில் பறவைகளை ஈர்க்கும் விதமாகவும், வெயிலுக்கு நிழல் தரும் வகையிலும் கனி தரும் மரங்களான கொய்யா, சப்போட்டா, மாமரம், அத்தி, மாதுளை போன்ற 250 மரங்களை நட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் முதல் பிளாஸ்டிக் இல்லாத பூங்கா என்ற பெயரை இந்த தங்கசாலை பூங்கா பெற்றது குறிப்பிடத்தக்கது.