அந்தியூர்,ஆக.30: அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதி ஓசூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தாசன்-மனிஷா.இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் ஏழு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவத் துறையினர் குடும்ப கட்டுப்பாடு குறித்த ஆய்வில் இருந்தனர். இதில் மனிஷாவிற்கு இதய பிரச்னை உள்ளதன் காரணமாக அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.
இதில் அவரது கணவர் தாசனுக்கு நவீன குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று அந்தியூர் அரசு மருத்துவமனையில் தாசனுக்கு நவீன வாசக்டமி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து 102 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.