கிருஷ்ணகிரி, ஜூன் 2: பர்கூர் அருகே கிரானைட் கடத்திய 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி கனிம மற்றும் புவியியல் துறை சிறப்பு தாசில்தார் அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் காளிக்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நின்ற டாரஸ் லாரியை சோதனையிட்டனர். அதில், கிரானைட் கல் ஒன்று அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி அருண்குமார் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை கைப்பற்றினர்.
அதேபோல், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி தலைமையில் அதிகாரிகள், இட்டிக்கல் அகரம் அரசு பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது, 6 யூனிட் கற்கள் அனுமியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரி சின்னசாமி அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.