காஞ்சிபுரம், அக்.17: காஞ்சிபுரம் மாவட்டம், தம்மனூர் ஏரி மதகில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், தம்மனூர் கிராம ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி, கடம்பேரி ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 2 ஏரிகளில் நீர் நிரம்பும் நிலையில் தம்மனூர், நெய்குப்பம், கம்பராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை கனமழையாக மாறியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 சதவீதம் ஏரிகள் நிரம்பின. அப்போது, தம்மனூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், திடீரென ஏரியின் கரை உடைந்து விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. உடனடியாக இதனை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், மதகை சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரியில் நீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயம் பாதிக்கும் என அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், கடம்பேரியில் சுமார் 50 சதவீத நீர் இருப்பு உள்ள நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரித்தால் தற்காலிக கரை உடைந்து விடும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன் தம்மனூர் ஏரி மதகு உடைப்பை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘தம்மனூர் ஏரி மதகு உடைந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என 13 முறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்களில் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்’ என்றனர்.