ஈரோடு, ஜூன் 11: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வீடுதோறும் கொசு மருந்து அடிக்க வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், இரவில் குளிர் அதிகரித்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பருவமழை காரணமாக, ஈரோடு மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இருமலுடன் கூடிய சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பருவமழைக் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் வருவது இயல்புதான் என்றாலும், இதுபோன்ற சளி, இருமலுடன் காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடுதோறும் கொசு மருந்து அடிக்க வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: பருவகால காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இரும்மல் இருந்தால் மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் தாங்களாகவே மருந்துகள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை தவிர, தங்களது வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், உரல்கள் பாத்திரங்கள் தண்ணீர் தேங்காமல் மூடி வைப்பது அவசியம். மேலும், வீடுதோறும் கொசு மருந்து அடிக்க வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.