திருவாரூர், ஆக. 2: பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை தேவை என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று திருவாரூர் மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பி .ஆர் பாண்டியன், தலைவர் பழனியப்பன், அமைப்புச் செயலாளர் தர், மாவட்ட தலைவர்கள் சுப்பையா, புலியூர் பாலு, செந்தில்குமார் மாவட்ட செயலாளர்கள் சரவணன், விஸ்வநாதன், கமல் ராம், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசு மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 காரணமாக விவசாயிகளின் நிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதால் இந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற்றிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது, டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மூன்றரைலட்சம் ஏக்கரிலான குறுவைப் பயிர்கள் நீரின்றி கருக துவங்கி உள்ளதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரினை கர்நாடகா அரசிடமிருந்து உடனடியாக பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்க வேண்டும், பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.