நன்றி குங்குமம் ஆன்மிகம் இராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சிதசரதன் அவை கூடியிருக்கிறது. விஸ்வாமித்திர முனிவர் வருகிறார். வந்தவர், தசரதனைப் புகழ்கிறார். ‘‘இன்று இந்திரன் பதவியில் இருப்பது உன்னால்தான்” என்கிறார். தசரதனுக்கு மகிழ்ச்சி. விஸ்வாமித்திரரைப் பார்த்து, ‘‘உமக்கு அடியேன் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார்.விஸ்வாமித்திரர் தயங்காமல் கேட்கிறார். அருமையான பாட்டு;தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறா தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரிலும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என உயிர் இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்“தருவனம்” என ஆரம்பித்து “தந்திடுதி” என்று முடிக்கும் நுட்பத்தைப் பாருங்கள். மரங்கள் நிறைந்த வனம். பழம், இலை, மலர் என அனைத்தும் தருகிறதே; மனிதர்கள் அதைப் பார்த்து மற்றவருக்குத் தரும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஓரறிவு உடைய மரங்கள் தருகின்ற குணங்களைப் படைத்திருக்கிறதே! ஆறறிவு படைத்த மனிதனே நீ தர மறுக்கலாமா? என்பது ஒரு கோணம்.தருவனம் என்பதற்குச் சாதாரண பொருள் மரங்கள் நிறைந்த காடு. தரு என்கிற சொல்லை வினைத்தொகையாகக் கொண்டால், தரு+வனம் தருவதற்கென்றே உள்ளவை காடுகள் என்ற பொருள் வரும். ஒரு நாட்டினுடைய சிறப்பு அந்த நாட்டில் உள்ள காடுகளின் சிறப்பைப் பொருத்தே உள்ளது. நாட்டை வாழ வைப்பது காடுகளே என்பதை விஞ்ஞானமும் பொருளாதாரமும் அறிந்த அனைவரும் சொல்வர். நாட்டில் உள்ளோருக்கு அனைத்தையும் தருவதற்கென்றே காடுகள் உள்ளன. காடுகள் அழிந்தால் நாடுகள் அழியும். எனவேதான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நாட்டின் வனவளத்தைக் காப்பாற்ற வேண்டும். அதுதான் மழை வளத்தையும் மண் போன்ற மற்ற வளங்களையும் தருகின்றது. இன்னொரு கோணத்தில், ஆன்மிகத்தின் அடிவேர் காடுகளில்தான் இருக்கிறது. வேதத்திற்கும் ஆரண்யகம் என்றொரு பொருளும் உண்டு. அதனால்தான் புராண இதிகாசங்கள் எல்லாம் காட்டிலே உள்ள தவசீலர்களிடமிருந்து தோன்றின.அவர்கள் காடுகளில் சென்று செய்யும் தவத்தால்தான் ஆன்மிக வெளிச்சம் நாட்டாருக்குக் கிடைக்கின்றது. எனவே தருவனம் என்பது நாட்டில் உள்ளோருக்கு தருவதற்காகவே உள்ள வனம் என்ற பொருளும் காணலாம். தருவதிலும் மூன்று முறை;கேட்காமல் தருவது என்பது ஒன்று. கேட்டுத் தருவது என்று ஒன்று. மூன்றாவதாக, அதுவாகக் கேட்காது. நாம் கேட்டாலும் தராது. ஆனால் நாமே சென்று எடுத்துக்கொண்டால் அது நமக்கு எந்த இடையூறும் செய்யாது. காடு களைப் பொருத்தவரை இந்த மூன்றாவது இடத்தில்தான் இருக்கின்றன. காடுகள் தவம் செய்ய அழைப்பதில்லை. கிழங்குகளையும் கனிகளையும் எடுத்துக்கொள்ளச் சொல்லி யாரிடமும் கெஞ்சுவதில்லை. தேவையுள்ளோர் அந்தக் காட்டிலேயே சென்றால், சென்று முயற்சித்தால், அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொள்வதற்கு என்றே படைக்கப்பட்டவை என்பதனாலே தருவனம் என்று காடுகளைச் சொல்லுகின்றார் கம்பர்.தருவை(மரங்களை)தருவதற்காகவே வனங்கள் படைக்கப்பட்டது போல, ராமன் என்கின்ற வள்ளலைத் தருவதற்காகவே படைக்கப்பட்ட வள்ளல்தான் தயரதன். வள்ளலைத் தந்த வள்ளல் என்பதினாலேயே காப்புச் செய்யுளில், `தருகை நீண்ட தயரதன்’ என்ற அருமையான பதத்தால் அவனுடைய வள்ளன்மை சொல்லப்படுகிறது. தருவின் (மரம்) குணமும், தருங்குணமும் (வள்ளன்மை) ஒன்றாகவே இருக்கும். தருகை நீண்ட அதாவது பிறருக்கு அளிப்பதற்காகவே நீண்ட கையை உடைய தயரதன் இயல்பும் பிறருக்குத் தருவதற்காகவே உள்ள வனத்தின் இயல்பும் ஒன்றுதான்.தருவனம் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், காட்டிற்கு ராமனைத் தருவதற்காகவே (வனத்திற்கு அனுப்புவதற்காகவே) ராமனைப் பெற்றானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரண்டு முறை ராமனை அவன் காட்டிற்கு அனுப்புகின்றான். ஒன்று விஸ்வாமித்திரருடைய தவத்தைக் காப்பதற்காக. இரண்டாவது முறையாக கைகேயி வரத்திற்காக.“ஆழி சூழ் உலகம் எல்லாம்பரதனே ஆள, நீ போய்த்தாழ் இருஞ் சடைகள் தாங்கி,தாங்க அருந் தவம் மேற்கொண்டு,பூழி வெங் கானம் நண்ணி,புண்ணியத் துறைகள் ஆடி,ஏழ் – இரண்டு ஆண்டின் வா” என்று,இயம்பினன் அரசன் என்றாள்.– என்பது பாட்டு.காடுகளுக்குப் போ… எனக்கு இவற்றையெல்லாம் தரவேண்டும் என்று சொன்னால் காடுகள் தராது. அதைப்போல வள்ளல் தன்மையுடைய காடாகிய தசரதனிடத்திலே சென்று ராமனைத் தா.. (கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி) என்று விஸ்வாமித்திரர் கேட்டதும் உடனே தந்துவிடவில்லை. நமக்கு வேண்டியவற்றை மரத்தில் உள்ள கிளைகளில் ஏறி உலுக்கி பறித்துக் கொள்வதைப் போல, விஸ்வாமித்திர முனிவர் தசரதனை சொல்லால் உலுக்கி, பலவந்தமாக ராமனைப் பெற்றுக்கொள்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால், தருவனம் என்ற வார்த்தையை எவ்வளவு பொருத்தமாக கம்பன் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி இருக்கிறான் என்பதை உணரமுடியும்.ஏன் தசரதன் கேட்டவுடன் ராமனைத்தரவில்லை?
விஸ்வாமித்திரர் கேட்கிறார், “காரணம்?” இந்த இடத்தில் கொஞ்சம் கம்பனிலிருந்து வான்மீகத்துக்குச் செல்ல வேண்டும்.“ஊன ஷோடஸ வர்ஷ” “முனிவரே! அவன் 16 வயது நிரம்பாத பாலகன்”. அப்பொழுதுதான் விஸ்வாமித்திரர் சிரிக்கிறார்.“தசரதனே! உன் பிள்ளையை உள்ளபடிநீ அறிவாயா? 16 வயது நிரம்பாதவனா! ராமன் ஒருவன், கோடி பேருக்கு சமம்”. “என் பிள்ளை. முனிவரே! படையூற்றம் இல்லாத சிறுவன். எனக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமா?” விஸ்வாமித்திரர் சொல்கிறார்; “எனக்குத் தெரியும். நான் அறிவேன்” என்கிறார். “என்ன தெரியும்?” “ராமன் மகாத்மா. ராமன் சத்தியம். ராமன் பராக்கிரமன்’’.அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் – என்பது வான்மீகி ஸ்லோகம்.பேருரை அரசர் பெரியவாச்சான் பிள்ளை இந்த ஒரு சுலோகத்திற்கு அற்புதமான விளக்கங்களை அருவியாகப் பொழிந்திருக்கிறார். பரமாத்மாவே ஒருவனுக்கு பிள்ளையாகப் பிறந்தாலும், பிறந்தது பரமாத்மாதான் என்பதை அறியும் தகுதி இல்லாவிட்டால் எப்படி உணர முடியும்? பரமாத்மா தன்னை பரமாத்மா என்று சொல்லிக்கொள்வது கிடையாது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு இடத்தில்கூட ராமன் தன்னை தேவருள் ஒருவனாகக்கூட சொல்லிக் கொண்டது கிடையாது. அஹம் மானுஷம் மன்யே நானும் சாதாரண மனிதன்தான் என்று கூறுகிறார்.ஆனால், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்றவர்கள் வந்திருப்பது மகாத்மாதான் என்பதை உணர்கிறார்கள். அண்ணல் காந்தியடிகள் எப்பொழுதும் தன்னை மகாத்மா என்றுசொல்லிக் கொண்டது கிடையாது. ஒரு பத்திரிகையாளர் ஒருமுறை கேட்டார்;“உங்களை எல்லோரும் மகாத்மா என்று அழைக்க, நீங்கள் அதனை மறுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்வதாக ஆகாதா?” என்று கேட்கிறார். “நான் மறுத்துப் பார்த்தேன். அவர்கள் இன்னும் தீவிரமாகப் போய்விடுகிறார்கள்” என்றார். எனவே மகாத்மாக்களை அறிய உண்மையை உணரும் திறன் வேண்டும். இப்பொழுது கேட்கிறான் தசரதன்;“எதனால் உங்களுக்கு ராமன் மகாத்மா வாகத் தெரிகிறான்?” விஸ்வாமித்திரர் பதில் சொல்கிறார். அதாவது பரம்பொருளை உணரும் தகுதியைப் பட்டியலிடுகிறார்;1. மன்னா கேள்! நீ வெளிக் கண்ணால் ராமனைப் பார்க்கிறாய். நான் அகக் கண்ணால் உணர்ந்து பார்க்கிறேன். எனவே எனக்குத்தெரியும். உனக்குத் தெரியாது. 2. நீ சாதாரண சிற்றரசர்களால் வணங்கப் படும் பேரரசன். நான் தவத்தில் சிறந்த மனிதர்களைப் பணிந்தவன். எனவே நான் அறிவேன். 3. மன்னா! நீ வில்லைப் பிடித்து அமர்ந்து ஆட்சி செய்கிறாய். நான் புல்லைப் பிடித்துக் கொண்டு வேள்வி செய்கிறேன். எனவேநான் அறிவேன். 4. நீ கிரீடத்தை வைத்துக்கொண்டு ஆட்சி செய்யும் முடிதலை மன்னன். நான் சடைதலை உடைய முனிவன். எனவேநான் அறிவேன். 5. மன்னா! உனக்கு ராஜச, தாமஸ குணங்கள் உள்ளதால். கோபம் வரும். தூக்கம் வரும். துக்கம் வரும். எனவே, ராமனை உள்ளபடி அறிய முடியாது. சாத்வீக சுபாவம்கொண்ட என்னால் ராமனை அறியமுடியும்.6. மன்னா! நீ சிம்மாசனத்தில் பிரபுவாக வீற்றிருக்கிறாய். நான் ஒரு ஆசிரியன் பலகையின் கீழ் அவர் காலடியில் உட்கார்ந்து பாடம் கேட்கிறேன். எனவேநான் அறிவேன். 7. மன்னா! உன் வாழ்க்கை நல்ல உணவும், சுகமும் உள்ள போக வாழ்க்கை. நான் காட்டில் வாழ்க்கையை யோக வழியில் நடத்துபவன். எனவேநான் அறிவேன். 8. நீ பிள்ளைகளையும், செல்வங்களையும் விரும்பி புத்திரகாமேட்டி யாகம், அஸ்வமேத யாகம் போன்றவற்றைச் செய்பவன். நான் மோட்சத்தை மட்டும் விரும்பி யாகம் செய் பவன். எனவேநான் அறிவேன்.9. உனக்கு லட்சியம், அர்த்த காம புருஷார்த்தம். அதாவது பொருளும், இன்பமும். என் லட்சியம் மோட்ச புருஷார்த்தம். வீடுபேறு.வேத சப்தத்தாலும், யாகத்தாலும், தானத்தாலும், தவத்தாலும் நான் அறிந்த மகாத்மாவை நீ எப்படி அறியமுடியும்? விஸ்வாமித்திரரின் விளக்கம் தசரதனுக்கு மட்டுமல்ல. நமக்கும் பரமாத்மாவை அறியும் வழியைக் காட்டும் தத்துவ விளக்கமாக அமையும்.முனைவர் ஸ்ரீராம்…