பரமக்குடி, ஆக. 24: பரமக்குடி அருகே பாலத்தில் கார் மோதி கர்நாடகவைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் பலியாகினர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துருவ்குப்தா (65), மனைவி செதிதேவி(52) மற்றும் குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
அப்போது, பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் பொட்டிதட்டி பகுதியில் சென்றபோது கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பாலத்தில் மோதியது. இதில், காரின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்து, கார் டிரைவர் மனோஜ் குப்தா (40) மற்றும் செதிதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த சத்தியேந்தர், துருவ்குப்தா, புல்காரி ஆகியோர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.