பரமக்குடி,நவ.5: தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு நீக்கம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இந்நிலையில் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பாகம் 28 முதல் 106 வரையிலான 78 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நகராட்சி தேர்தல் உதவியாளர் சுதா மேற்பார்வையில் நடைபெற்றது.
இதனை பரமக்குடி நகர்மன்ற தலைவர் செய்து கருணாநிதி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நவ.5, 18 , 19 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள, முகவரி மாற்றம் செய்ய மக்கள் உங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை அளித்து மாற்றிக் கொள்ளலாம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் 25வது வார்டு கிளைச் செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.