செம்பனார்கோயில், நவ.25: பரசலூர் ஊராட்சியில் பொதுமக்களை கடித்த விஷக் கதண்டுகள் அழிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே பரசலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தனூர் மெயின்ரோட்டில் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தன. இந்த கதண்டுகள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கடித்து துன்புறுத்தி வந்தன.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்திடம், விஷக்கதண்டுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மேற்கண்ட இடத்திற்கு சென்று பொதுமக்களை அச்சுறுத்திய கதண்டுகளை தீயிட்டு அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த பணியின்போது ஊராட்சி செயலர் நாகராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் இருந்தனர்.