கடலூர், ஆக. 3: கடலூர் கோண்டூர் ரெயின்போ நகரை சேர்ந்தவர் அருண்(23). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில், பயிற்சி பெறுவதற்காக ரூ.25 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அருணுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் ஒரு நாள் கூட பயிற்சிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அருண் தான் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அந்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தினர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனால் அருண் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தினர் தரப்பில் கூறும் போது, விண்ணப்ப படிவத்தில் ஒருமுறை பணத்தை செலுத்திய பிறகு அந்த பணம் திரும்பி தரப்பட மாட்டாது என்று நிபந்தனை கூறப்பட்டுள்ளதாக கூறினர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அவர்கள் தங்களது தீர்ப்பில், அருண் ஒரு மாணவராகவும், வேலையில்லாதவராகவும் இருப்பதால், அவரது தந்தை, ஓய்வூதியம் மூலம் கட்டணத்தைச் செலுத்தியுள்ளார். மேலும் ஒரு நாள் கூட அவர் பயிற்சி வகுப்புக்கு செல்லாததால், அவர் முன்பணமாக கட்டிய தொகை ரூ.25,000ஐ, 9 சதவீத வட்டியுடன் செலுத்திய தேதியில் இருந்து 2 மாதங்களுக்குள். வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவு தொகையாக ரூ.5000ம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.