புதுக்கோட்டை: கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி, வினாப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் தொடக்க விழா புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத்தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வழிகாட்டலுடன் நேற்று நடைபெற்றது. அனைவரையும் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலைசெந்தில் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி)ரமேஷ், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி) செந்தில், ( தனியார் பள்ளிகள்) அறவாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) செய்யது முகம்மது கலந்துகொண்டு தலைமை தாங்கி போட்டியினை துவக்கி வைத்து பேசுகையில், ஆசிரியர்கள் உங்களின் எதிர்கால நலனுக்காகத்தான் கண்டிக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் எதிர்கால இலக்கினை எளிதில் அடையலாம். தோல்வியே வெற்றிக்கு முதல்படி. இங்கு பங்கேற்பவர்கள் அனைவரும் வெற்றி பெற இயலாது.