சாயல்குடி, நவ.5: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்பயிர் காப்பீடு செய்ய இம்மாதம் 15ம் தேதி கடைசி நாள் என்பதால், விவசாயிகள் காப்பீடு செய்யும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வி.ஏ.ஓக்கள் பற்றாக்குறையால் மூவிதழ் சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் கால அவகாசத்தை நீட்டிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி எனப்படும் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதில் நெல் முக்கிய பயிராக 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிப்படுகிறது. அடுத்த படியாக மிளகாய் 47ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாகவும், சுமார் 5ஆயிரம் ஏக்கரில் இறைவை சாகுபடியாகவும்(போர்வெல்,கிணறு) சாகுபடி செய்யப்படுகிறது.
அடுத்து சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், மல்லி, வெங்காயம், நிலக்கடலை, பயறு வகை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. வறட்சி, பலத்த மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்படும் போது வழங்கப்படும் பயிர்காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி தேசிய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்.
தற்போது மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட சில இடங்களில் அதிகமான மழை பெய்ததால், பயிர்கள் தண்ணீர் மூழ்கி நாசமானது. ஆனால் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி, சிக்கல், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை போன்ற பகுதிகளில் கால தாமதமாக மழை பெய்ததால் தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு நவ.15ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் ஏக்கருக்கு ரூ.352ஐ பிரிமீயமாக செலுத்தி காப்பீடு செய்து வருகின்றனர். பயிர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ.23,478 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாகளிலும் வி.ஏ.ஓக்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரு வி.ஏ.ஓ இரண்டிற்கு மேற்பட்ட குரூப்களை கூடுதலாக பார்க்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் விவசாய இடத்தில் பயிகளை கள ஆய்வு செய்து, பயிர்காப்பீடு செய்வதற்கு தேவையான பட்டா10(1), சிட்டா, அடங்கல் உள்ளிட்ட மூவிதழ் சான்றுகளை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்று பயிர்காப்பீடு செய்யப்படும் வங்கிகள், இ.சேவை மையங்கள், தனியார் கணினி சென்டர்களிலும் சர்வர் முடங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் காப்பீடு செய்ய, பிரிமீயம் தொகை கட்ட முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் காப்பீடு செய்வதற்கு நவ.15ம் தேதி கடைசி நாள் என்பது போதுமானதாக இல்லை.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க பயிர் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நிலக்கடலை, சூரிய காந்தி பயிர்களுக்கு டிச.31ம் தேதியும், எள் மற்றும் பருத்திக்கு ஜன.31ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.