சாயல்குடி, ஆக.21: சாயல்குடி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்,மிளகாய் பயிர்களுக்கு பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாயல்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் முருகேசன், பொருளாளர் அந்தோணி,செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கருணாநிதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சாயல்குடி, மூக்கையூர், இலந்தைகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் கிணறு உள்ள பகுதியில் விவசாயம் மற்றும் பனைமரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் 5 ஏக்கர் பகுதியில் உப்பளம் அமைக்க தடை விதிக்க வேண்டும்.
எஸ்.தரைக்குடி வருவாய் பிர்கா கிராம பகுதிகளில் கடந்த பருவமழையின் போது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்,நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தேசிய பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கிடப்பதால் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.