Friday, June 20, 2025
Home செய்தி பயப்படக்கூடிய நோயல்ல (PCOS)

பயப்படக்கூடிய நோயல்ல (PCOS)

by kannappan

நன்றி குங்குமம் தோழி இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின் அப்பாயின்மென்ட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர் பெண்கள். குடும்பத்திற்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பற்றி கண்டுகொள்வதே இல்லை. ஆரம்ப காலத்திலேயே தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றி மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறியல் மற்றும் கருவுறுதல் மருத்துவவியல் டாக்டர் பத்மப்பிரியா.“அல்முதிர் சினைமுட்டைகள் நோய்க்குறி அல்லது பலவுறை அண்ட நோய் (PCOS) என்பது, இனப்பெருக்க வயது பிரிவை சார்ந்த பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான கோளாறு ஆகும்.  இது கிராமப்புற மக்களைவிட, நடுத்தர மற்றும் உயர் வருமானம் உள்ள நகர்ப்புற மக்களிடையே மிகவும் அதிகளவில் இருப்பது வெகுவாக காணப்படுகிறது. PCOS இருப்பது 2.2 முதல் 2.6 சதவீதம் வரை வேறுபடுவதாகவும் மற்றும் இது இந்திய டீன் ஏஜ் பருவ பெண்களிடையே 9.13 சதவீதம்  இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு டீன் ஏஜ் பருவ பெண்களுக்கு முன்னதாகவே நோய் கண்டறிவதற்கு பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்றால் என்ன?பாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்பது சினைமுட்டைப் பையில் முட்டைகளைச் சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளாலும், சிலருக்கு பரம்பரையாகவும், மரபணு மூலமாகவும் இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வொரு சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்து தன்னை உடைத்துக் கொண்டு வெளிவரும் போது தான், விந்துகளோடு இணைந்து கருவாக உருவாகுகிறது. மீதியிருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன, இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும். ஆனால், பாலிசிஸ்டிக் ஓவரீ சின்ட்ரோம்  இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளி வருவதில்லை, அந்த முட்டைகள் அழிவதுமில்லை. அவற்றைச் சுற்றி நீர் சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன. யாருக்கெல்லாம் PCOS பிரச்னை வரலாம்?டீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய்க்குறிகளால் ஒரு பெண்ணின் உறவினர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பாரானால், அந்தப்பெண்ணுக்கும் PCOS வருவதற்குரிய ஆபத்து ஏற்பட சாத்தியம் உள்ளது.  பலவுறை அண்ட நோயின் (PCOS ) மூன்று முக்கிய அம்சங்கள்ஒழுங்கற்ற மாதவிடாய், அதாவது, சினைப்பைகள் ஒழுங்கான முறையில் முட்டைகளை வெளியிடாது. உடலில் ஆண் ஹார்மோன்களின் இயக்குநீர் (ஆன்ட்ரோஜன்) அளவு மிகையாக இருத்தல், இது அளவுக்கு அதிகமாக முகம் மற்றும் உடலில் முடி வளர்வதற்கு வழிவகுக்கும். சினைப்பைகள் பெரிதாக ஆகி அதனுள் பல திரவம் நிரம்பிய சுரப்புதிசுக்கள் (பைகள்) உள்ளடங்கியிருக்கும். இதில் குறைந்தபட்சம் இரண்டு பிரச்னைகள் உங்களுக்கு இருக்கு மானால், உங்களுக்கு PCOS  இருப்பதாக கண்டறியப் படும். இதற்கான அறிகுறிகள் என்ன?ஒழுங்கற்ற மாதவிடாய்முகம் மற்றும் மார்பில்  மிகையாக  முடிகள் வளர்ந்திருத்தல்எடை அதிகரிப்புமுடியிழப்புஎண்ணெய் வடியும் சருமம் அல்லது முகப்பரு.PCOS ஏற்படுவதற்கான  காரணங்கள் என்னென்ன?சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஹார்மோனான இன்சுலின் அதிக அளவில் இருப்பது உட்பட, உடலில் இயல்புக்கு மாறான ஹார்மோன் அளவுகள் தொடர்பானது. PCOS  உள்ள பல பெண்கள் இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.  எனவே இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இது, நுண்குமிழ் உருவாவதுடன் குறுக்கிடக்கூடிய டெஸ்டோடெரான்; (ஆண் ஹார்மோன்) போன்ற ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்வதற்கு பங்களிக்கிறது.  இதன்மூலம் இயல்பான கரு உருவாகும் இயக்கத்தை தடுக்கிறது. கருத்தரிப்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன?PCOS, பெண்களின் குழந்தையின்மைக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். பல பெண்கள் கர்ப்பமாக முயற்சிக்கும் போதுதான் அவர்களுக்கு PCOS இருப்பது கண்டறியப்படுகிறது. அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவது அநேக நேரங்களில் தவறிப்போகும்.  கர்ப்பமடைவது இதனால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும். PCOS-ன் காரணமாக வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் ?PCOS  உள்ள பெண்களுக்கு, இதய நோய், பக்கவாதம் மற்றும் 2-ம் வகை நீரிழிவுநோய் (உயர் ரத்த சர்க்கரை), உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல ஆண்டுகளாக ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.  கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது கருப்பை உள்ளே ஹார்மோன் செறிவூட்டப்பட்ட அமைப்பின் மூலம் (IUS) குறைக்க முடியும்.  PCOS-க்கான  சிகிச்சை முறைகள்நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.  அறுவை சிகிச்சை இல்லாமலும் இதனை சரி செய்ய முடியும். அது நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் தொடர்புடையவை. உடல்பருமனுள்ள பெண்கள் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். 5 சதவீதம் எடை குறைப்பு கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியம் (முற்றிலும் முழு கோதுமையில் தயாரிக்கப்படும் ரொட்டி, முழு தானியங்கள், பழுப்பரிசி போன்றவை) கொழுப்பற்ற உணவுகள், மீன் சேர்த்துக் கொள்வது அவசியம். முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி, ஒழங்குமுறையற்ற மாதவிடாய் மற்றும் கருவுறல் பிரச்சனைகளுக்கு மருந்துகளும் உள்ளன.  ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் PCOS பிரச்னை உள்ள பெண்களும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளை கூறினார் டாக்டர் பத்மப்பிரியா.மகாலட்சுமி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi