தர்மபுரி, அக்.19: அரூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 316 பயனாளிகளுக்கு ₹1.31 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, தீர்த்தமலை அருகே பொய்யப்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு தலைமை வகித்து, கலெக்டர் சாந்தி பேசுகையில், ‘பின்தங்கிய கிராமமான பொய்யப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இக்கிராமத்தில் மொத்தம் 5,700க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு தேவையான அங்கன்வாடி மையம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது,’ என்றார். முகாமில், பல்ேவறு அரசு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், மாற்றுத்திறனாளி, முதியோர், ஆதரவற்ற விதவை, திருமணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் மற்றும் விபத்து இழப்பீட்டு தொகைகள், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் என மொத்தம் 316 பயனாளிகளுக்கு, ₹1 கோடியே 30லட்சத்து 91 ஆயிரத்து 965 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை, கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். முகாமில் சம்பத்குமார் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா, அரூர் ஆர்டிஓ வில்சன் ராஜசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரளா சண்முகம், அரூர் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, துணை தலைவர் அருண், தீர்த்தமலை ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பலதா, தீர்த்தமலை ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, துணைத்தலைவர் தமயந்தி, அரூர் தாசில்தார் பெருமாள், பிடிஓ.,க்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.