கலசபாக்கம், ஆக.20: கலசபாக்கம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பம்பைக்காரரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், கெங்கவரம் ஊராட்சி, மதுரா நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(45), பம்பை வாசிப்பவர். விவசாயமும் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலில் பம்பை வாசிப்பதற்காக வேலு லாரியில் சென்றார். புதுப்பாளையம் அருகே சென்றபோது லாரியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த வேலுவை உடன் வந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு வேலுவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர், உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பேரில், வேலுவின் கல்லீரல், இதயம், நுரையீரல் சிறுநீரகம் உட்பட அனைத்து உடல் உறுப்புகளும் நேற்று தானமாக வழங்கப்பட்டது. இதில் இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேலா மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்ட வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உடல் உறுப்புகள் தானம் செய்த பம்பைக்காரர் வேலுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.