பெரணமல்லூர், ஆக.29: பெரணமல்லூர் அருகே பனையம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் கிராம தேவதைகளாக பனையம்மன் மற்றும் மாரியம்மன் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் காப்பு கட்டி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டு ஆவணி மாதம் முன்னிட்டு கடந்த 6ம் தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலும், 14ம் தேதி பனையம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடந்தது. தொடர்ந்து, கூழ்வார்த்தல் விழா, பரசுராமர் சிலை அழைப்பு விழா, இரவு எல்லை ஓடல் மற்றும் மகாலட்சுமி அலங்காரம், திரிபுரசுந்தரி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், தவநிலை நாயகி அலங்காரம் உட்பட பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
முக்கிய நிகழ்வாக தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர், மதியம் சிறப்பு அலங்காரத்தில் பனையம்மனை மேளதாள ஊர்வலத்துடன் எடுத்து வந்து, தேரில் வைத்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரினை இழுத்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியே தேர் வலம் வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.