மண்டபம்,ஜூன் 25: மண்டபம் மத்திய ஒன்றியம் பனைக்குளத்தில் திமுக சார்பில் பூத் முகவர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி தலைவர் பெளசியா பானு முன்னிலை வகித்தார். மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்து, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை பகுதியில் திமுக வேட்பாளரை நாம் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.
மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகன்குளம் ஆற்றங்கரை, பனைக்குளம், தேர்போகி, புதுவலசை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிளை, ஒன்றியம், மாவட்டம், மாநில நிர்வாகிகள் வாக்குகளை சேகரிப்பதற்கு தொண்டர்களை உற்சாகப்படுத்தி ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை ேதர்தலில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்க உழைக்க வேண்டும் என ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை அமைப்பாளர் அக்பர் அலி, திருப்புல்லாணி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆனந்தன் கலந்து கொண்டு பேசினர். பனைக்குளம் கிளை திமுக செயலாளர் ஜஹாங்கீர் அலி நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பனைக்குளம் பகுதி கட்சி நிர்வாகிகள், பாகமுகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.