பந்தலூர், ஆக.28: பந்தலூர் பாறைக்கல் சாலை மழைநீர் நிரம்பி காணப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் பாறைக்கல் சாலை பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு செல்லும் கான்கிரீட் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தினமும் ஏராளமான ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இந்த சாலையானது இரும்புபாலம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலையாகவும் இருந்து வருகிறது. எனவே, குண்டும், குழியுமாக இருந்து வரும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.