பந்தலூர், மே 20: பந்தலூர் அருகே குந்தலாடி தாணிமூலா பகுதியில் சாலைக்கு சம்மந்தம் இல்லாத சிறு பாலத்தால் பயனின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி தானிமூலா பகுதியில் பழங்குடியினர் உட்பட பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குந்தலாடி பஜார் பகுதியில் இருந்து செல்லும் சிமெண்ட் சாலையில் நடந்து சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை சிமெண்ட் சாலை அமைக்கபட்டுள்ளது. அதற்கு பின் சுமார் 300 மீட்டர் தூரம் சாலை போடப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் வயல்வெளியில் சேறும் சகதியுமான நடைபாதையில் நடந்து செல்கின்றனர். பலமுறை ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகத்திற்கு சாலை அமைக்க கேட்டு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த சாலைக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது நடந்து செல்லும் சாலைக்கு சம்பந்தம் இல்லாத நிலையே உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாலத்தின் இரு பக்கமும் சாலை ஏதும் அமைக்கப்படவில்லை அதற்கான எந்தவித முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த பாலம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என தெரியாத நிலையே உள்ளது. இதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தொடர் சாலை அமைக்க வேண்டும் அல்லது சம்பந்தம் இல்லாத இடத்தில் பயனற்ற நிலையில் பாலம் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.